Tuesday, March 27, 2018

கொச்சி, செராய் பீச்

இரண்டு நாள் பயண திட்டம்.

கடவுளின் சொந்த தேசமான கேரளாவிற்கு அடிக்கடி செல்வதன் முக்கிய காரணம் அது கோவைக்கு அருகில் இருக்கிறது, அதுவுமில்லாமல் நிஜமாகவே இயற்கையை இயற்கையாக வைத்திருக்கிறார்கள்.

 இரண்டு நாளைக்கு முன்பு எதிர்பாராத திட்டமிடுதலில் போர்ட் கொச்சியும் செராயும் செல்ல முடிவெடுத்தோம். நான் பயணங்களில் முக்கியமாக கற்றுக்கொண்ட விஷயம் என்னவெனில் நல்ல சாப்பாடு கிடைத்தால் அது போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம், உணவக விஷயங்களில் கூகுளை நம்பி நிறைய மண்டை காய்ந்திருக்கிறேன், எனவே இரண்டு வேலைக்கான உணவாவது எடுத்து கொண்டு கிளம்புவதே புத்திசாலித்தனமான காரியம்.

  கோவையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரமுள்ள போர்ட் கொச்சிக்கு சொந்த வண்டியில் செல்வது உத்தமம், விலை குறைவான நல்ல வசதி கொண்ட விடுதிகள் முன்னரே பதிவு செய்து விடுங்கள். உதாரணமாக இந்த பிரேம்ஸ் ஹோம்ஸ்டே வெகு சிறப்பு. AC அறையே 1600 ரூபாய்தான் வருகிறது, 800 ரூபாயில் இருந்தே விலை ஆரம்பிக்கிறது, குடும்பம் எனில் யோசிக்காமல் அறை பதிவு செய்யலாம்.

வரும் வழியில் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து பாதை செய்திருப்பார்கள், இரண்டு பக்கமும் நீர் சூழ கப்பல்களை பார்த்தபடி அந்த பாதையை கடப்பது வெகு அழகாக இருக்கும். ரோபோட் போல சிறிய ரக உளவு விமானங்கள் மேலே பறக்கும் வாயை பிளந்தபடி பார்த்தவாறு போகலாம். பகல் பதினோரு மணிக்குள் அங்கே சென்று விடுங்கள்,  அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூன்று கிலோ மீட்டருக்கு உள்ளேயே எல்லா சுற்றுலா தளங்களும் அடங்கி விடுவதால் அவற்றை விசாரித்து ஐந்து மணிக்குள் முடித்துக்கொண்டு, போர்ட் கொச்சி வந்துவிடுங்கள் வழியெங்கும் வெளிநாட்டு ஜோடிகளும், நம்ம ஊர் (கேரளா நாட்டிளம் பெண்கள்) மேல் சட்டையை மட்டும் உடையாய் போட்டுகொண்டு வலம்வரும் அறிய காட்சியை காணலாம்.
  குழந்தைகள் விளையாட கடலுக்கு அருகே ஒரு பார்க் உள்ளது, சுற்றிலும் கைவினை பொருட்கள், உணவு கடைகள், ஓவிய, இசைக் கருவி விற்பனை நிலையங்கள் என வெளிநாட்டு கலாச்சார அழகில் கடைகள் நிறைந்திருக்கும்... வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள் என கடைகளை அட்டகாசமாக வைத்திருக்கிறார்கள். பொருட்களை அங்கே பார்த்துக் கொள்ளுங்கள், வாங்க வேண்டிய இடம் பற்றி அடுத்தது எழுதுகிறேன்.

கடலில் கால் நனைக்கலாம், குளிக்க அனுமதிப்பதில்லை, ஆதலால் சூரியன் மறையும் வரை நல்ல ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனின் அழகையும், பிரம்மாண்டமான நகரும் கப்பல்களையும் ரசிக்கலாம்.

இரவு உணவிற்கு அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி கிருஷ்ணா போன்ற சைவ உணவகங்களும், முஸ்லீம் பீப் பிரியாணி ஹோட்டல்களும் உண்டு, கட்டுப்படியாகிற விலையில் ஓரளவு நல்ல சுவையுடன் கிடைக்கின்றன.
குடிகாரர்கள் ஒன்பது மணிக்கு முன்பே சரக்கு வாங்கி வைத்து விடுங்கள், நமது ஊர் போல ப்ளாக்கில் கிடைக்காது.

 அடுத்தநாள் காலையில் சிரமம் பார்க்காமல் நாலு மணிக்கு எழுந்து முப்பது கிலோ மீட்டர் தூரமுள்ள செராய் பீச்சுக்கு (ஒரு மணிநேரம்) வந்து விடுங்கள், மூன்று, நான்கு மணி நேரம் கடலில் விளையாடலாம். பக்கத்தில் போட்டிங் போக ஒரு மணிநேரத்துக்கு ஆயிரம் என அழைப்பார்கள் அது சிறப்பில்லை, வேண்டாம்.
 காலை உணவை வரும் வழியில் புட்டு, ஆப்பம், கடலை கறி, அல்லது முட்டை கறி கிடைக்கும் சிறிய உணவகங்களில் கூட நம்பி செல்லலாம், அது கேரள நாட்டின் தேசிய உணவு.

அறை காலி செய்யும் நேரத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செராய் பீசிலிருந்து புறப்படுங்கள். காலி செய்த பின், மதிய உணவை வழியில் முடித்துக்கொண்டு (சாப்பாடு வேண்டாம், கொட்டை அரிசி மட்டுமே கிடைக்கும், வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள்) எர்ணாகுளம் வந்து விடுங்கள்.

அங்கே மார்க்கெட் ஜெட்டி உண்டு, அவை முழுக்க லோக்கல் கடைகளால் நிரம்பி வழிந்திருக்கும், பேரம் பேசி வாங்கலாம். அதை முடித்து விட்டு அதன் எதிரிலேயே Boating point Marine drive உண்டு, தலைக்கு நூறு ரூபாய் டிக்கெட் குழந்தைகளுக்கு இலவசம், ஒரு மணிநேரம் கடலுக்குள் சுற்றி காட்டுவார்கள், தனி தீவுகள், கடலோரம் அமைந்திருக்கும் மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் என கண்டு மகிழலாம்.
 முடித்த பின் கொச்சியில் உள்ள இந்தியாவிலேயே பெரிய ஷாப்பிங்  மாலான லூலுவை பார்க்கலாம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுற்றியும் முழுவதும் பார்த்து முடிக்க இயலவில்லை.
இரண்டு நாட்களுக்கான கேரள சுற்றுலா திட்டம் இத்துடன் நிறைவடைகிறது.



No comments:

Post a Comment