Tuesday, February 13, 2018

பரிச்சியம் - கல்லை. சிறி.ப.வில்லியம்ஸ்

முரட்டு மீசையுடன்
முறைத்துக்கொண்டிருந்த
முண்டாசு நபரின்
கறுப்பு-வெள்ளைப்
புகைப்படம் காட்டியபோது
நீண்ட யோசனைக்குப் பின்
பாரதிதாசன் என்றான்
என் முகக் குறிப்பு உணர்ந்து
இல்லையில்லை
பகத்சிங் என்று
திருவாய் மலர்ந்தான்
உ.வே.சா-வை
வ.உ.சி. என்றோ
மா.பொ.சி-யை
கி.வா.ஜா. என்றோ
துணிச்சலாய்
அடையாளப்படுத்துவான்.
கம்பராமாயணம் படைத்தது
கண்ணதாசன் என்றும்
சிலப்பதிகாரம் எழுதியது
காளிதாசன் என்றும்
சந்தேகமின்றிச் சாற்றுவான்.
ஒருமுறை
ராமகிருஷ்ண பரமஹம்சரை
திருவள்ளுவரென்று சொல்லி
மிரள வைத்தான்.
இதனால் உண்டாகும்
மன உளைச்சல்கள் தவிர்த்து
சின்னத்திரை நடிகன்
முதற்கொண்டு
குத்துப்பாட்டு நடிகை வரை
அத்தனை பேர்களும்
என் பிள்ளைக்கு அத்துபடி!

No comments:

Post a Comment