Sunday, December 10, 2017

வயநாடு சுற்றுலா

கடந்த முறை  சென்ற போது மிக தவறாக திட்டமிட்டு ஏமாந்ததால் வயநாடு ஒரு மொக்கை சுற்றுலா பிரதேசம் என பதிவு செய்திருந்தேன்... மன்னிக்கவும்

 இந்த முறை வேண்டா வெறுப்பாக தான் ஆரம்பித்தேன், கோவையில் இருந்து ஊட்டி சென்று அங்கிருந்து வயநாடு போவதாய் இருந்த திட்டத்தை திம்பம் கர்நாடகா வழியாக செல்ல காலையில் முடிவெடுத்து நாலரை மணிக்கு ஆரம்பித்தேன்.

 ஐந்து மணிநேர இளையராஜா பாடல்களுடன் காரமடை, பவானிசாகர், பண்ணாரி வழியாக ஆரம்பித்தது பயணம், நல்ல ஓட்டுனருக்கு மலைப்பாதை வாகன செலுத்தல் சொர்க்கம், ஆனால் வெறும் 14 கிமீக்கு, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் லாரிகளை வரிசையாக வர வைத்து சோதனை தருகிறது. காலை ஏழு மணிக்கும் திம்பம் விழிப்படைந்திருக்கவில்லை. மலை ஏற்றம் முடிந்தபின் வாகனசோதனை சாவடி அருகில் ஒரு சிறுகடை  உண்டு (அந்த சோதனைசாவடியில்தான் சிறுத்தை இரண்டு வனகாவலர்களையும், சில மலைவாழ்மக்களையும் கொன்றது உபரி தகவல்) சிறுதின்பண்டங்களை சுடச்சுட செய்து தருகிறார்கள், தேநீரும் உண்டு, நல்ல சுவை.

 அதை தாண்டி ஹாசனூருடன்  தமிழக எல்லை முடிவடைகிறது, படுகேவலமான கர்நாடக சாலை அங்கிருந்து ஆரம்பிக்கிறது, தமிழக சாலைகளை குறை சொல்லும் எனக்கு சரியான பாடத்தை புகட்டுகிறது கர்நாடகா.

இதில் ஒரு குழப்பம் என்னவெனில் தாளவாடி (வீரப்பன் ராஜ்குமாரை கடத்தி கொண்டு போன காட்டு பங்களா அங்கே இருக்கிறது) கர்நாடக எல்லைக்குள் வருகிறது ஆனால் அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள்.

 காலை ஒன்பதுமணிக்கு கூட இருள் பிரியாத, மேகம் பொழியும், காரில் லைட் போட்டே ஓட்டும் நிலையிலும்,  காட்டுப் பன்றிகள், மயில்கள், மான்கள் (காரை தாண்டி குதித்து ஓடின), முயல்கள், முள்ளம்பன்றிகள் சர்வ சாதாரணமாக கண்ணில் படுகின்றன. சிலிர்ப்பும் ஆனந்தமும் பரவ வாகனத்தை மெதுவாகவே செலுத்துகிறேன்.
 தயவு செய்து அந்த வழியில் வருபவர்கள் பணம் கையிருப்பு வைத்திருங்கள், "atm என்றால் என்ன?" என அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். சாம்ராஜ் நகரில் மட்டுமே atm வசதி உண்டு, அதுபோக பெரிய ஹோட்டல்களில், பெட்ரோல் பங்குகளில் கூட கார்டு உபயோகிக்க இயலவில்லை (அரே மோடி கியா கரே தும் டிஜிட்டல் இந்தியா)
 அங்கே ஒரு பெரிய ஹோட்டலில் ஏமாந்து போய் சாப்பிட்டேன், சாம்பார் ஒரே இனிப்பு, இட்லியில் கருவேப்பில்லை எல்லாம் போட்டு ஒரு விதமாக தருகிறார்கள், பூரி மசால் உருப்படியான உணவு, டீ பரவாயில்லை. செல்லும் வழியிலோ, சுற்றுலா தளங்களிலோ நல்ல உணவு கிடைத்தது எனில் நீங்கள் அதிஷ்டக்காரர்.
 குண்டல்பேட் தாண்டி பந்திப்பூர் வழியே சென்றால் கூட்டமாக யானைகள், அதைவிட அதிக கூட்டமாக மான்கள் வழியெங்கும் பரவசபடுத்துகின்றன. பத்து யானைகள் குட்டிகளோடு நிற்கும் இடத்தில்  அரைமணிநேரத்துக்கு மேல் நின்றிருந்தேன்.
 வயநாடு செல்ல பந்திப்பூர் பாதையில் செல்லுங்கள், அதுதான் சொர்க்கம்.
வயநாடு பற்றி நிறைய பதிவு வந்திருக்கும். நான் சுருக்கமாகவே முடிக்கிறேன்.

கல்பேட்டாவில் அறை பதிவு செய்யுங்கள், அங்கிருந்து சுற்றுலா தளங்கள் போய் வர வசதியாக இருக்கும்.

அசைவ உணவு விரும்பிகள் சிட்டி ஹோட்டல் விசாரித்து அங்கு சாப்பிடுங்கள், சைவம் எனில் அப்பாஸ், கட்டுப்படியாகும் விலை,  வயிற்றை அலற வைப்பதில்லை, சுவை சிறப்பு.

மூன்று நாட்கள் திட்டமிடுங்கள்.

 லேக்கடி வியூ பாயிண்ட், பாணாசுர சாகர் அணை, மீன்முட்டி அருவி, கார்லாட் லேக்கின் ரோப் ரெய்டு தவற விட வேண்டாம். உங்களுக்கு மிக பிடித்த இடமெனில் ஒரு முழு நாளும் அங்கு செலவு செய்யுங்கள், எல்லாவற்றையும் பார்த்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.
முக்கியமாக மொபைலை ரூமிலேயே வீசி விட்டு கண்களாலும் மனதாலும் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment