Monday, October 3, 2016

பேயை நேருக்கு நேர் சந்தித்த போது...

 திகில் கதை என்று பதட்டப்பட்டு தெறித்து விட வேண்டாம், உங்களை எந்த விதத்திலும் பயப்படுத்தாது என்ற உத்தரவாதத்துடன் தொடங்குகிறேன்.

 பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது , பொலவக்காளிபாளையம் எனும் என் சிறிய கிராமத்தில் இருந்து, கோபிசெட்டிபாளையம் சாந்தி தியேட்டரில் வீட்டிற்கு தெரியாமல் நைட் ஷோ பார்ப்பதில் எங்கள் சங்கத்துக்கு திரில் இருந்தது. அதுவும் ஜாக்கிஜான், ஜெட்லி படமென்றால் இரகசிய திட்டத்துடன், வீட்டில் ஆட்டையை போட்ட ஐந்து, பத்து பணத்துடன் ஜெட்டில் (சைக்கிள் தான்) கிளம்பி விடுவோம்.

 
படம் முடித்து ஜாக்கிஜான் போலவே ஓடி வந்து சைக்கிளில் ஏற முயன்ற என் அண்ணா ஜகதீஸ், நான் பிரேக் பிடித்தால் படாத இடத்தில் பட்டு ஒரு வாரம் மருத்தவமனையில் ஓய்வெடுத்தது, கேட்டின் வழியே செல்லாமல், வீரத்தை காட்ட வீட்டின் ஓட்டை பிரித்து அவர் இறங்கும்போது, உள்ளே இருந்த அவர் அம்மா நிஜ ஜாக்கிஜானாக மாறி அவரை பிரித்து எடுத்தது எல்லாம் எங்கள் வரலாற்று காவியங்கள்.

நிற்க,

 அதே போன்ற ஒரு இரவில் மூன்று பேர் கொண்ட குழு வீர சாகச திரைபடத்தை பார்த்து விட்டு, வித்தை செய்யும் முடிவுடன் பதினைந்து நிமிடத்தில் ஊர்க்கு வந்து சேர்ந்தோம் (7 கி மீ), வடக்காலூர் தெக்காலூர் என்ற இரு பெரும் கிளைகள்(?) எங்கள் ஊருக்கு உண்டு, மற்ற இருவரும் அதே வேகத்தில் என்னை சுடுகாட்டுக்கு பிரியும் வழியில் விட்டுவிட்டு வடக்கே பறந்து விட்டனர். நண்பர்களாம்....  நான் தெற்க்கே போக வேண்டும்  

 வீரப்பரம்பரையானாலும், சரியாக 12 மணியளவில் சுடுகாடு வழியாக வீட்டுக்கு செல்வதென்பது எந்த கைப்பிள்ளைக்கும் பெரும்சோதனை தரக்கூடியது.

வெகு வேகமாக அந்த இடத்தை சைக்கிளில் கடந்து விடுவதும், கடந்த பின் "தப்பிச்சோம்" என்ற பெருமூச்சு விடும் சாதனையை நிறையமுறை நிகழ்த்தி இருந்ததாலும், அதே போன்ற வேகத்துடன் அன்றும் செல்ல ஆரம்பித்த உடன் நேர்ந்தது சோதனை.

  சினிமா படங்களில் வரும் காட்சியை போலவே வெள்ளை புடவை கட்டி, வேகமாக தூரத்தில் ஒரு உருவம். சரியாக பிணம் எரிக்கும் இடத்தின் இடது புற சாலையில் நான். அந்த பயத்தின் உணர்வுகளை வார்த்தையாய் கொண்டு வருவது என்பது பாலா படத்தில் நடிப்பதை விட மோசமானது.

 வருவது கிளைமாக்ஸ்...

 "யார்றா அவன்" என்று என்னை சப்தம் போட்டு கேட்டது பேய், சப்த நாடியும்  ஒடுங்கி விட்டதென்று படித்திருப்பீர்கள், அனுபவித்தேன். சைக்கிளை போட்டு கீழே விழப்போன என்னை ஓடி வந்து பிடித்து விட்டது, "அடேய் பிரகாசு, இந்நேரத்துல இங்க என்னடா பண்றே" என்று பெயர் சொல்லி வேறு கூப்பிட்டது.

என்னடா நெப்(போலி)யனுக்கு வந்த சோதனை என பார்த்தால் என் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் வேலம்பாலயத்து (ஊர் பெயர்) ஆயா, அது வயதான விதவை... உயிரை கொண்டு வந்து திரும்ப கொடுத்த எல்லா சாமிகளுக்கும் நன்றி சொல்லி, "நீ என்ன பண்றே ஆயா, பன்னண்டு மணிக்கு?" என்று பாசம் பொங்கும் குரலில் கேட்டேன், "நைட் கரண்ட்டுடா, லட்சுமண் (அண்ணா)  ஊருக்கு போய்ட்டான், அதான் நானே தோட்டத்துக்கு தண்ணி எடுத்து விட மோட்டார் போட வந்தேன், (அப்போதெல்லாம் இரவு 12 மணிக்குத் தான் மின்சாரம் தருவார்கள்)   பாத்து போ" என்ற படி கடந்து போய்விட்டார்.

 அதற்கு பின் நான் எந்த பேயையும் கடவுளையும் நேருக்குநேர் இதுவரை சந்திக்கவில்லை. சந்தித்தால் இன்னொரு கட்டுரை எழுதுகிறேன்.  
 
    

No comments:

Post a Comment