Friday, September 16, 2016

காவிரி ஆறும்,அதை கொலை செய்த நாமும்

இந்த புகைப்படம் காவிரி டெல்டாவின் மையப்பகுதி பிரதான சாலையில் எடுக்கப்பட்டது.  தஞ்சையை தாண்டிய பின் இந்த காவிரி புதர்மண்டி, சாக்கடை கலந்து, கழிவுநீர் வர, வெங்காயத்தாமரை சூழ, பாலிதீன் குப்பைகள் நிறைந்து கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருக்கிறது.

மக்கள் இதை பார்த்தும்சாதாரணமாக கடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் விளைகிற நெல்லின் அளவு 18ஆயிரம்டன். இதில் 13ஆயிரம் டன் காவிரி பாயும் பூமியான 7மாவட்டங்களில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.  இப்பொன்விளையும் பூமிக்கு உயிர் தரும் ஆறுதான் காவிரி. நம் மக்கள் காவிரி ஆற்றையோ, ஆற்று நீரையோ பாதுகாக்க சிறு பங்களிப்பை கூட நிகழ்த்தவில்லை என்பதன் பெரும் வேதனை.

இந்த புகைப்படம்விவசாயத்தை நம்பி வாழ்கிற, அதை உண்ணும் பொருளாக வாழ்க்கை ஆதாரமாக மாற்றுகிற பூமியில் ஆறு சீரழிந்து கிடப்பது வரலாற்றின் மிகமோசமான துயரம்.  ஆற்றுசமவெளி பகுதியால், அவ்விடங்களில்   செழிப்பாக வாழ்ந்தது நம் கலாச்சாரம், எல்லா வளமும் தந்த அதே ஆற்றை சாக்கடையாக்கி, அதன் சாவுக்கும் வழி வகிக்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை நீரை பாதுகாத்து தேவைகேற்ப பயன்படுத்த வழிவகை செய்யவே.

காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் எந்த அணையும் கட்டப்படவில்லை என்பதும், அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா? நெடும் துயரம் என்னவெனில் கட்டிய அணைகளை கூட பராமரிக்கவில்லை. ஆறு,குளம், ஏரிகண்மாய், வாய்க்கால் என எவையும் சரியாக தூர்வாரப்படவில்லை.  காவிரி ஆற்றில் இருந்து பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நீரின் அளவு 155TMC.  நாம் கர்நாடாகாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் நீரின் அளவு 142TMC.  தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்திருந்தாலே முப்போகம் விளையும் பூமியாக இருந்திருக்கும். 

சென்னையில் வெள்ளம் வந்த பொழுது ஏற்றப்பட்ட பேரிழப்பிற்கு முக்கிய காரணம் ஆறு, குளங்கள்,ஏரிகள் தூர்வாரப்படாததே என்பது யாவரும் அறிந்ததே. நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆறுகளை பாதுகாப்பதில் உள்ள  பெரிய நன்மையை நாம் வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க தவறிவிட்டோம். 

கர்நாடகம் நிச்சயம் தண்ணீர் தந்தே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் தரும் நீரை நாம் தலையிலா தூக்கிவரமுடியும்? காற்று கலப்படமாகிவிட்டால் எப்படி சுவாசிப்பது சிரமமோ, அது போல் நீர் கலப்படமாகிவிட்டாலும் விஷமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இனியாவது ஆறுகளை பாதுகாக்கவேண்டும்.


இது அடுத்த தலைமுறைக்கு, நாம் செய்தே தீர வேண்டிய அடிப்படை சூத்திரம்.

@Rajarocketrocky from twitlonger 

No comments:

Post a Comment