Monday, January 25, 2016

ஷோபிகா

எனது பக்கத்துக்கு வீட்டில் இருந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் கடந்த 16ம் தேதி பொங்கலன்று குத்தி கொலை செய்யப்பட்டான், அவனுக்கு வயது 24, கொலை செய்த இருவரும் அவன் நண்பர்கள் அவர்களுக்கும் வயது 23, 24. பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நான்கு நாட்களுக்கு பரபரப்பான செய்தியை விற்று விட்டு இன்று அதை மறந்து போனது 

நிற்க,

அவை மறந்து போனது, அவன் காதல் திருமணம் செய்தவன் என்பதும், அவன் மனைவி ஷோபிகாவிற்க்கு அப்பா அம்மா இல்லை என்பதும், 45 நாட்களே ஆன ஒரு கைகுழந்தை இருக்கிறது என்பதும்

அனாதையாக வாழ்ந்த அவள், விக்கி எனும் நண்பன் காதலனாக மாறி, அவன்  மூலம் உறவுகளை பெற்றதும், அந்த உறவுகளும் அவளை ஏற்றுகொண்டதும், இதுவரை இல்லாமல் வாழ்வில் வசந்தம் வீச தொடங்கிய காலத்தில் திடீரென பொங்கல் விளையாட்டில் வந்த ஒரு சிறிய கோபமும், சிறிய சண்டையும் விக்கியின் உயிரை பணயம் வாங்கி இருக்க, மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிற்கிறாள், ஒரு கை குழந்தையுடன்       

இதுவரை நான் யாரையும் தப்பாக பேசியதுமில்லை, யாரையும் கெட்டு போக வேண்டுமென மனதாலும் நினைத்ததில்லை என்றும் எனக்கு ஏன் இப்படி நடந்து தொலைகிறது என்றும் கதறிய ஷோபிகாவை என்ன சொல்லி ஆறுதல் படுத்துவதேன்றே தெரியவில்லை.

ஷோபிகா இப்போது அவர்கள் மாமனார் வீட்டிலேயே தங்கி உள்ளார், அவர்களும் கடைசி வரை பார்த்துக்கொள்ளும் மனம் படைத்தவர்கள் எனினும் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஷோபிகாவிற்க்கும், அந்த பிஞ்சு குழந்தைக்கும் ஏன் படைப்பு இப்படி ஒரு தண்டனை வழங்க வேண்டும் என்பது புரியவில்லை 

படிப்பை தொடர விரும்பும் அவளுக்கு எல்லா வித உதவியும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், சிறிய தேவைகளை எங்களால் முடிந்த அளவு நிறைவேற்றுகிறோம் என்றும், உனக்கு ஒரு அக்கா நான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே என்றும் கூறி எனது மனைவி ஷோபிகாவை தேற்றி இருக்கிறாள் 
அவள் இனி செய்ய வேண்டியவைகளையும் கடக்க வேண்டிய தூரங்களையும் ஞாபக படுத்தி இருக்கிறாள், 

ஏற்கனவே இதே போன்ற ஒரு சூழ்நிலையில் பெரும் துயரை கடந்து, இரண்டு குழந்தைகளை வளர்த்து அவர்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்து, அவர்களை  வெற்றிபெற செய்த எனக்கு அம்மா முறையாக வேண்டிய சொந்தம் சென்னையில் வசிக்கிறார்கள், நான் ஒருமுறை அவர்களை அழைத்து வந்து பேச வைக்கலாம் என்றிருக்கிறேன்   

எல்லாவித கவலைகளையும், துயரங்களையும் ஆற்ற, காலத்தால் மட்டுமே இயலும்,  ஷோபிகாவும் அவள் குழந்தைக்குமான பிரார்த்தனைகள் எனது குடும்பத்தில் எப்போதும் உண்டு, மேலும் என் உடன் பிறவா தங்கைக்கு ஏதாவது செய்ய யோசிக்க வேண்டுமா என்ன? 

2 comments:

  1. மனதைக் கனமாக்கிய பதிவு. ஷோபிகாவின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிக்க என் பிராத்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நெகிழ்ச்சி, எங்களால் முடித்தவரை உதவ முயற்சிக்கிறோம்

      Delete